பா.ம.க.வின் தயக்கமும், தி.மு.க.வின் வியூகமும்!



கூட்டணி பேரம் நடக்கும் முன்னே, தேர்தல் வரும் பின்னே' என்பது தமிழக அரசியலில் கடந்த 40 ஆண்டுகளாக எழுதப்படாத சட்டம். "மியூசிக்கல் சேர்' ஆட்டத்தில் சுற்றிச் சுற்றி ஓடி, கிடைத்த இடத்தைப் பிடித்துக் கொள்ளும் ஆர்வத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் அல்லாத ஏனைய கட்சிகள் நடத்தும் தகிடுதத்தங்கள் ஏராளம் ஏராளம்.
 ÷பல கட்சிகளுக்கும் இப்போதுதான் தங்களது சுயமரியாதை நினைவுக்கு வரும். ஜாதிய பலமும், வாக்கு வங்கிப் புள்ளிவிவரங்களும் பயன்படும். கடந்த முறை பெற்ற இடங்களைப் பற்றியே கவலைப்படாமல், கடந்த தேர்தலில் போட்டியிட்ட இடங்களைவிட அதிக இடங்களில் போட்டியிட்டுத் தங்களை வளர்த்துக் கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும்.
 ÷தில்லியில் சோனியா காந்தியைச் சந்தித்து தி.மு.க.வுடனான காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்து கொள்ளச் சென்ற முதல்வர் கருணாநிதி, பா.ம.க. தங்களது கூட்டணியில் இருக்கிறது என்று அறிவிக்க, பா.ம.க. தர்மசங்கடத்தில் நெளிய இப்போது அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருப்பது, பாட்டாளி மக்கள் கட்சி எந்தக் கூட்டணியில் இணையப் போகிறது என்பதுதான்.
 ÷பென்னாகரம் இடைத்தேர்தலில் தனியாகப் போட்டியிட்டு 41,282 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்த பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை, ஏதாவது கூட்டணியில் அங்கம் வகித்ததாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. சட்டப்பேரவையில் உறுப்பினர் பலம் இல்லாமல் போனால், அந்த அரசியல் இயக்கம் வலுவிழந்துவிடும் என்பதை ம.தி.மு.க.வின் அனுபவத்திலிருந்து பா.ம.க. பாடம் கற்றுக் கொண்டிருக்கிறது.
 ÷""பாட்டாளி மக்கள் கட்சி தி.மு.க., அ.தி.மு.க. என்று இரண்டு கட்சிகளிடமும் அதிக இடங்களுக்காக பேரம் நடத்திக் கொண்டிருந்தது. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காகத்தான் முதல்வர் கருணாநிதி, பா.ம.க. தங்கள் கூட்டணியில் இருப்பதாக அறிவித்தார். எதிர்பாராத இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் ராமதாஸ், நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அவசரப்பட்டு அறிவித்திருக்க வேண்டாம்'' என்று கருத்துத் தெரிவித்தார் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர்.
 ÷முதலில் பா.ம.க. தங்களது கூட்டணியில் இருக்கிறது என்று அறிவித்த முதல்வர் கருணாநிதி பிறகு பொதுக்குழுவில், "எதிரிகளை நம்பலாம், துரோகிகளை நம்பக்கூடாது' என்று சோனியா காந்தி கருத்துத் தெரிவித்ததாகக் கூறியிருப்பது ஏன் என்ற கேள்விக்கு- ""இதையெல்லாம் யார் சோனியா அம்மையாரிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளப் போகிறார்கள்? பா.ம.க.வை வழிக்குக் கொண்டுவர முதல்வரின் ராஜதந்திரமாகக் கூட இருக்கலாம் அது'' என்று பா.ம.க.விலேயே பலர் விமர்சிக்கிறார்கள்.
 ÷தி.மு.க., இந்தத் தேர்தலில் "ஸ்பெக்ட்ரம்' ஊழல் என்கிற மிகப்பெரிய சுமையுடனும், அரைகுறை மனதுடன் கூட்டணியில் தொடரும் காங்கிரஸ் எந்த அளவுக்கு உதவும் என்று தெரியாத மனநிலையுடனும்தான் மக்களைச் சந்திக்க இருக்கிறது. கூட்டணி ஆட்சி என்கிற உத்தரவாதம் அளிக்காத வரையில் காங்கிரஸ் தொண்டர்களின் முழுமனதுடனான ஆதரவு கூட்டணிக்கு இருக்காது என்பதை தி.மு.க. தலைமை நன்றாகவே உணர்ந்திருக்கிறது.
 ÷மேலும், காங்கிரஸ் தலைமை, தி.மு.க. கூட்டணிக்குச் சம்மதித்தாலும், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணியை ஏற்றுக் கொண்டாலும், சராசரி காங்கிரஸ் வாக்காளர்கள் எந்த அளவுக்கு தி.மு.க. கூட்டணியை ஏற்றுக் கொள்வார்கள் என்கிற கேள்விக்குறி, தி.மு.க. தலைமையை அலட்டவே செய்கிறது. மக்களவைத் தேர்தலில் ஆதரவளித்த காங்கிரஸ் வாக்காளர்கள் இப்போது சட்டப்பேரவைத் தேர்தலில் 1980-ல் நடந்ததுபோல தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கக் கூடும் என்கிற சந்தேகமும் பரவலாகவே காணப்படுகிறது.
 ÷ஆரம்ப காலம் முதலே தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பைக் கணிசமாகத் தருவது வன்னியர்கள் அதிகமாக உள்ள வட மாவட்டங்கள்தான். ஏறத்தாழ 100 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய வட மாவட்டங்களில் அதிக இடங்களில் தி.மு.க. போட்டி போட விரும்புவதும் அதனால்தான். கூட்டணிக் கட்சியான காங்கிரஸýக்குக் குறைந்தது 20 இடங்களையாவது வட மாவட்டங்களில் தரவேண்டிய நிலையில், பா.ம.க.வுக்கும் கணிசமான தொகுதிகளை அளித்தால் தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளே சுமார் 50க்கும் குறைவானதாக இருக்கும்.
 ÷""50 இடங்களில் போட்டியிட்டால் 50 தொகுதிகளிலுமா வெற்றி பெற்றுவிட முடியும்? வெறும் 30 இடங்களில்தான் வட மாவட்டங்களில் வெற்றி பெறுகிறோம் என்றால், கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்குக் கிடைத்த 60 இடங்கள்தான் தி.மு.க.வுக்கும் கிடைக்கும். பா.ம.க.வைச் சேர்த்துக் கொள்ளாமல் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரண்டும் இருந்தாலே வட மாவட்டங்களில் மட்டும் நாம் 60க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற முடியும்'' என்பது தி.மு.க.வில் பரவலாக இருக்கும் கருத்து

Comments